நயன்தாராவின் தயாரிப்பு படம்…. இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டியில் தேர்வு ! திரைக்கு வரவதற்கு முன்பே விருதுகள் !

கூழாங்கல்’ திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கார் பட்டியலில் தேர்வாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார்.
சமீபத்தில், இவர் தயாரிப்பில் ‘கூழாங்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வினோத்ராஜ் இயக்கி உள்ளார். ஏற்கனவே, சிறந்த படத்திற்கான பல விருதுகளை இந்த படம் வாங்கியுள்ளது. இந்நிலையில், ஆஸ்கார் போட்டியில் இந்தியா சார்பாக ”கூழாங்கல்” படம் தேர்வாகியுள்ளது. இதற்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம், 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில், 14 படங்களையும் பார்வையிட்டனர் இதில், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் உருவான, கூழாங்கல் படம் தேர்வாகியுள்ளது. 2022ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக கூழாங்கல் தேர்வாகியுள்ளது

இன்னும் திரைக்கு வராத நிலையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் டைகர் விருது , மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா விருது , IFFSA டொரண்டோ விழா விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வானது. ஆனால், ஆஸ்கார் விருதுக்கான தேர்வுக் குழுவால் அந்த திரைப்படம் இறுதி பட்டியலுக்கு ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இதுவரை “மதர் இந்தியா, சலாம் பம்பாய் மற்றும் லகான்” ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு இந்திய திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெறவில்லை
