சாத்தான்குளம் போல் அடுத்து போலீசால் தாக்கபட்டு ஆட்டோ டிரைவர் மரணம் தொடரும் போலீஸ் வெறியாட்டம்!!
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (25). இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குமரேசன் மீது செந்தில் என்பவர் கொடுத்த இடப் பிரச்னை தொடர்பான புகாரின் பேரில் கடந்த மே 8ஆம் தேதி அன்று காவல்துறையினர் விசாரணைக்குச் சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அறைந்து திருப்பி அனுப்பிவிட்டார்.
மீண்டும் மே 10ஆம் தேதி அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமரேசன் வீகேபுதூர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் குமரேசனை உதவி ஆய்வாளர், காவலர்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் பூட்ஸ் காலால் வயிறு, முதுகுப் பகுதியில் மிதித்து, லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி உள்ளனர்.
இதன்பேரில், தென்காசி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் குமரேசனின் தந்தை புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் ஆய்வாளர் ஒருவரை விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக காவல் கண்காணிப்பாளர்தெரிவித்தார்.இந்நிலையில் 16 நாள்களாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குமரேசன் நேற்று இரவு (ஜுன் 27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாத்தான்குளம் சம்பவம் மக்களிடையே ஏற்படுத்திய கொந்தளிப்பு இன்னும் ஆறாத நிலையில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையின் கடும் சித்ரவதையால், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.